தமிழ்நாடு

கோவில் தெப்பக்குளம் அருகே கஞ்சா செடி: அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள்!

webteam

கோவில் தெப்பக்குளம் அருகே கஞ்சாசெடி வளர்ந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் நகர் ஐயப்பன் கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. அதன் கரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை மற்றும் மாலையில் அந்த நடைபாதையில் பலரும் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பல மக்கள் வந்து போகும் இடம் என்றாலும் நடைபாதை போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. குளத்தின் கரைப்பகுதியில் செடிகொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கின்றது.

இந்நிலையில், இந்த புதருக்குள் கஞ்சா செடியும் வளர்ந்து இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் புகலிடமாக அக்குளக்கரை மாறியுள்ளதாகவும், இப்பகுதியில் கஞ்சா புகைக்கும் செயல் தான் கஞ்சா செடி வளர்வதற்கும் காரணமாகியுள்ளதாகவும் அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் குளத்தின் கரையை நகராட்சி முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.