சார்பு ஆய்வாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கைதான கணேசன் என்பவர் உருக்கமாக பேசி வருத்தம் தெரிவிக்கும் வீடியோ ஒன்று ‘வாட்ஸ்அப்’பில் வைரலாக பரவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிறுத்தப்பகுதியில் பேக்கரி ஒன்றில் இரண்டு பேர் சிகரெட் கேட்டதில் தகராறு ஏற்பட்டது. அப்போது தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உச்சிபுளி காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெயபாண்டி மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டவர்களை விசாரிக்க சென்றனர்.
அப்போது மது போதையில் இருந்தவர்கள் உதவி ஆய்வாளர்கள் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியதோடு உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்றனர். இதனால் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி மற்றும் நந்தகுமார் தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இருவரும் பின் சிகிச்சைக்காக ராமநாதபுரம அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்றுவரும் இருவரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் சந்தித்து தாக்குதல் குறித்து விசாரணை நடத்தினார். போலீசார் மீது தாக்குதல் நடத்திய சட்ட விரோத கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும், குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் ஐந்து ஆயிரம் சன்மானம் கொடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதனையடுத்து உதவி ஆய்வாளர்களை தாக்கிய வழக்கில் உச்சிப்புளி அருகே வெள்ளமாசிவலசை பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளியான கணேசன் ( 25) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களை பாதுகாத்து வரும் போலீசாரிடம் நண்பனாக பழகி மரியாதை கொடுங்கள் எனவும் நான் மதுபோதையில் உதவி ஆய்வாளர்களை தாக்கிவிட்டேன், என்னைப் போல யாரும் இதைப்போன்று சமூகவிரோதச் செயலில் ஈடுபட வேண்டாம் எனவும் சார்பு ஆய்வாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கைதான கணேசன் வாட்ஸ்அப் வீடியோவில் பேசியுள்ளார். அது இப்போது வைராலாக பரவி வருகிறது.