கஜா’ புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் உயிரிழந்தனர். இதேபோல, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மேமாத்தூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவரின் வீடு இன்று அதிகாலை 5 மணி அளவில் இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அய்யம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். ராமச்சந்திரன் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி பகுதியில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் நடுக்குப்பத்தில் சுவர் இடிந்து விழுந்து ரெங்கநாதன் என்பவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகே வடமணப்பாக்கம் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சிறுமியின் தந்தை, தாய் மற்றும் இரண்டு மகள்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு செய்யாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வந்தவாசி அருகே வெண்குன்றத்தில் மின்னல் தாக்கி மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்தார்.
இதேபோல, சிவகங்கையில் சுவர் இடிந்து முத்து முருகன் என்பவர் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு பகுதியில்கூரை வீடு மீது மரம் விழுந்து காசிநாதன் என்ற விவசாயி உயிரிழந்தார்.
பாசிக்கொட்டகையில் மோட்டார் கொட்டகை இடிந்து ரெங்கசாமி என்பவர் உயிரிழந்தார். திருப்பத்தூரில் மரம்விழுந்து எலிசபெத் ராணி என்பவர் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவரும் கோவில்வெண்ணி பகுதியில் கனகவள்ளி என்பவரும் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.
இதையடுத்து உயிரிழப்பு 23 ஆக உயர்ந்தது. இந்நிலையில் வேதாரண்யத்தில் ‘கஜா’ புயல் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 26 ஆக உயர்ந்துள்ளது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சுப்பையா, வடுகநாதன் மற்றும் பாப்பு ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 2 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் மொத்த உயிரிழப்பு 28 ஆக அதிகரித்துள்ளது.