கஜா புயலால் பாதித்துள்ள மக்களுக்கு நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
கஜா புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் என மாவட்டத்தின் பல பகுதிகள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துள்ளது. தென்னை, வாழை என ஏகப்பட்ட மரங்கள் புயல் காற்றில் முறிந்து விழுந்துள்ளன. ஆடு, மாடுகள் மடிந்து கிடக்கின்றன. உருக்குலைந்துள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் பல பகுதிகளில் மக்கள் உணவு, நீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக தமிழக அரசு கணக்கிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு திமுக சார்பில் 1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் திமுக எம்எல்ஏ மற்றும் எம்.பிக்களின் ஒருமாத சம்பளம் நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனிடையே கஜா புயலால் பாதிப்புகளுக்கு நடிகர், நடிகைகளும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. இந்நிலையில் கஜா புயலால் பாதித்துள்ள மக்களுக்கு நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். கஜா புயல் நிவாரண நிதியாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா மற்றும் 2டி நிறுவனம் இணைந்து மொத்தமாக 50 லட்சம் ரூபாயை வழங்க உள்ளனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிகளை வழங்கவுள்ளனர்.