கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் அவர்கள் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு தமிழகத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. நிதித்துறை அமைச்சகத்தில் செலவினங்கள் துறையின் ஆலோசகரான ஆர்.பி.கவுல், வேளாண் துறை இயக்குநர் பி.கே.ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை சேர்ந்த மாணிக் சந்திரா பண்டித், மின் துறை அமைச்சகத்தின் தலைமை பொறியாளர் வந்தனா சிங்கல், நீர்வள ஆதார இயக்குநர் ஹர்ஷா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் பொறியாளர் இளவரசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தும் மத்திய குழுவினர் பின்னர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கின்றனர். அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்குச் சென்று ஆய்வு மேற் கொள்ளும் குழுவினர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.