Model Image Chat Gpt
தமிழ்நாடு

தமிழ்நாட்டை உலுக்கிய மாபெரும் ஊழல்.. அதிகாரிகள் செய்த தில்லுமுல்லு.. தணிக்கையில் வெளிவந்த உண்மை!

பெண்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்தப்படும் மகளிர் திட்ட நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது சிறப்புத் தணிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Praveen Joshva L

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் 388 வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் நிதிப் பதிவுகளை ஆய்வு செய்ய கடந்த மார்ச் மாதம் சிறப்புத் தணிக்கை தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு துறையின் நிதி ஆலோசகர் தலைமையில், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, ELCOT ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் இந்த தணிக்கை பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதுவரை 186 வட்டாரங்களின் நிதிப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் 107.94 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உண்மையான பயனாளிகளுக்குச் செல்ல வேண்டிய திட்டநிதி வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் பிற தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது இந்த தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், போலியான மற்றும் மாற்றப்பட்ட பில்கள் பயன்படுத்துதல், பயிற்சி நடத்தாமலேயே பயிற்சிக்கான செலவு காட்டுதல், ஆதாரப் பில்கள் இல்லாமல் பணம் எடுத்தல், உண்மையான பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை தனிநபர்களின் கணக்குகளுக்கு மாற்றுதல், அரசு நிதிக்குக் கிடைத்த வட்டியை அரசுக் கணக்கில் செலுத்தாமல் இருத்தல், முறையான வங்கிப் பதிவுகளை பராமரிக்காமல் இருத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகை பணியாளர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரின் பெயர்களுக்குச் சென்றதாகவும், இதுதொடர்பாக 8 வட்டார மேலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.10 கோடியே 22 லட்சத்து 13 ஆயிரத்து 235 முறைகேடு தொடர்பான தொகை கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் 25 லட்சத்து ஆயிரத்து 15 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு, 9 கோடியே 97 லட்சத்து 12 ஆயிரத்து 220 ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மொத்தமாக முறைகேடாக தனிநபர்கள் மற்றும் உறவினர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட தொகையில் 1 கோடியே 43 லட்சத்து 52 ஆயிரத்து 335 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த வங்கிக் கணக்குகளில் இருந்து 3 கோடியே 60 லட்சத்து 61 ஆயிரத்து 180 ரூபாய் மீட்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

model image

மேலும், 2025-26-ஆம் ஆண்டிற்கான வட்டித் தொகையாக கோடியே 58 லட்சத்து 60 ஆயிரத்து 639 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 388 வட்டாரங்களில் இதுவரை 186 வட்டாரங்கள் மட்டுமே தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள வட்டாரங்களில் தணிக்கை முடிவடைந்தால் முறைகேடு தொடர்பான தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட தொகைகள் மீட்கப்பட்டதுடன், அவர்களை பணிநீக்கம் செய்து FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறியுள்னனர்.