தமிழ்நாடு

பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்

பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்

webteam

பட்டாசு ஆலைகளுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள கடும் நிபந்தனைகளை தளர்த்த கோரி சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள ப‌குதியில் முழு கடை அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக கூறி கடந்த 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பை கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில், பட்டாசு வெடிப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும் எவ்வித தடையும் இல்லை. ஆனால் சரவெடி பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது, பேரியம் நைட்ரேட் மூலப்பொருட்களுடன் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது, பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகள் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் 40 நாட்களாக மூடப்பட்டுள்ளன. பசுமை பட்டாசு தயாரிக்க நடைமுறையில் சாத்தியமில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும், அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற நிபந்தனைகளை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும் பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிவகாசி, வெம்பக்கோட்டை, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.