தமிழ்நாடு

‘சுந்தரி அக்கா’ கடைக்கு உணவுத் தரச் சான்றிதழ் - அரசு கொடுத்த அங்கீகாரம்

webteam

சென்னை மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் சுந்தரி என்பவரின் கடைக்கு உணவுத் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை மெரினா உழைப்பாளர்கள் சிலை மற்றும் நீச்சல் குளத்திற்கு இடையே தள்ளுவண்டி உணவுக் கடை வைத்திருப்பவர் சுந்தரி. இவரது கடையை வாடிக்கையாளர்கள் அனைவரும் ‘சுந்தரி அக்கா’ கடை என அழைப்பார்கள். இவரது கடை தொடர்பாக பல செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதனால் இந்தக் கடை பிரபலமான கடையாக திகழ்கிறது. மீன், மட்டன், ஈரால் என வகை வகையான அசைவ உணவுகள் இவரது கடையில் கிடைக்கும். குறைந்த விலை என்பதால் மதிய நேரத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் கடையில் அதிகரித்து காணப்படும். 

இந்த கடைக்கு வாடிக்கையாளர்கள் கொடுத்த அங்கீகாரத்துடன் தற்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் அரசால் கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் இருந்தும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் இருந்தும் இவரது கடைக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதாக அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அதில், மிகவும் தரமான தெருக்கடை உணவு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் சுந்தரியை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தனது கடைக்கு கிடைத்திருக்கும் சான்றிதழை தனது வாடிக்கையாளர்களுக்கு சமர்பிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.