தமிழ்நாடு

தாங்க முடியாத வெயில்... கோயம்பேடு, உதகை சந்தைகளில் பழங்கள் விலை கிடுகிடு உயர்வு

நிவேதா ஜெகராஜா

தாங்க முடியாத வெயில் மற்றும் தேவை அதிகரிப்பின் காரணமாக கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையில் அதிகப்படியான தேவையின் காரணமாக பழங்களின் விலை அதிகரித்துள்ளது. ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழங்களின் விலை அதிகரித்து விற்கப்படுகிறது.

* ஒரு கிலோ மாதுளை ஒரு வாரத்திற்கு முன்பு கிலோவிற்கு 200 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 350 என அதிகரித்துள்ளது.

* இரண்டு நாட்களுக்கு முன்பு சாத்துக்குடியின் விலை 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 80 ரூபாய் என அதிகரித்து விற்கப்படுகிறது.

* அதேபோல திராட்சை, பப்பாளி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலை கிலோவிற்கு 20 முதல் 40 வரை அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் பழங்களின் வரத்து குறைவாக இருப்பதும் கோடைகாலம் என்பதால் பழங்களின் தேவை அதிகமாக இருப்பதும் விலை ஏற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

இதேபோல உதகையில் இம்முறை பிளம்ஸ் பழம் உற்பத்தி குறைந்துள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூபாய் 240 முதல் 260 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் மற்றும் பல்வேறு பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, இங்கு பேரிக்காய், கமலா ஆரஞ்சு, பிளம்ஸ் மற்றும் பீச்சீஸ் பழங்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது குரங்குகள் மற்றும் கரடிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால், பெரும்பாலான பகுதிகளில் இருந்த பழ மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் மட்டுமே இப்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த பழங்கள் ஆண்டு முழுவதும் கிடைக்காது. அனைத்துமே ஒரு குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, ஊட்டி ஆப்பிள் என அழைக்கப்படும் பிளம்ஸ் பழங்கள் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை விளையும்.

பொதுவாக இந்த பழங்கள் அதிகளவு விற்பனைக்கு வந்தால், கிலோ ஒன்று ரூபாய் 50 முதல் 100 வரை விற்பனையாகும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிகம் வாங்கிச் செல்வர். ஆனால், இம்முறை பிளம்ஸ் பழங்கள் மகசூல் மிகவும் குறைந்துள்ளது. மேலும், மார்ச் மாதம் முதல் விளைய வேண்டிய இந்த பழங்கள் தற்போதே சில இடங்களில் விளைந்துள்ளன.

இதனால் மார்க்கெட்டிற்கு குறைந்தளவே பிளம்ஸ் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், இதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, நீலகிரியில் உள்ள  மார்க்கெட்களில் கிலோ ரூபாய் 240 முதல் 260 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக உள்ளதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த பழங்களை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். மகசூல் அதிகரித்தாலே பிளம்ஸ் பழங்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள்  தெரிவிக்கின்றனர்.