தமிழ்நாடு

காவல்நிலையம் எதிரே பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பழவியாபாரி- கந்துவட்டி கொடுமை காரணமா?

webteam

விருத்தாசலத்தில் கந்து வட்டி கொடுமையால் பழ வியாபாரி காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பழமலைநாதர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமால் மைதீன் மகன் அசாருதீன் (24). பழ வியாபாரியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் பாபு (32) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 70 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஒரு நாளைக்கு 700 ரூபாய் என, நான்கு மாதமாக வட்டி மட்டும் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகன் பாபு கொடுத்த அசல் பணத்தை அசாருதீனிடம் திருப்பி கேட்டுள்ளார். அவரால் கொடுக்க முடியாததால் ஜெகன் பாபு, அசாருதீனின் பழம் விற்பனை செய்யும் மினி லாரியை பழத்துடன் தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அசாருதீன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் ஜெகன் பாபுவும் தனக்கு தரவேண்டிய பணத்தை அசாருதீன் கொடுக்கவில்லை என கூறி புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. அசாருதீன் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேற்று மாலை மனு கொடுத்தார். இந்நிலையில் இன்று மீண்டும் விருதாச்சலம் காவல் நிலையத்திற்கு வந்து ஜெகன் பாபு மீது நடவடிக்கை எடுத்து தனது மினி லாரியை மீட்டு தர வேண்டும் என கேட்டார்.

அப்போது போலீசார் உரிய பதில் கூறாததால் ஆத்திரமடைந்த அசாருதீன் திடீரென விருத்தாசலம் காவல் நிலையம் எதிரே தன்மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த விருத்தாசலம் போலீசார் ஓடி சென்று அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீரை ஊற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்து வட்டி தகராறில் பழ வியாபாரம் செய்யும் மினி லாரியை எடுத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த பழ வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.