சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. கிலோவுக்கு பத்து ரூபாய் தொடங்கி 150 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்படுகிறது.
சென்னை கோயம்பேடு பழச்சந்தையில், ஒரு கிலோ மாதுளை ஒரு வாரத்திற்கு முன்பு கிலோவுக்கு 200 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 350 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சாத்துக்குடியின் விலை 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல திராட்சை, பப்பாளி, ஆரஞ்சு பழங்களின் விலை கிலோவிற்கு 20 முதல் 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பழங்களின் வரத்து குறைவாக இருப்பதும் கோடைக்காலம் என்பதால் பழங்களின் தேவை அதிகமாக இருப்பதும் விலை ஏற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.