தமிழ்நாடு

வாகனம் வாங்கவும், ஓட்டவும் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் - இன்று முதல் அமல்

வாகனம் வாங்கவும், ஓட்டவும் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் - இன்று முதல் அமல்

webteam

வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும், ஓட்டுநர் உரிமம் இருப்பவர்கள் மட்டுமே வாகனத்தை வாங்க முடியும் என்ற விதியும் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாட்டிலேயே சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதையடுத்து, வாகன ஓட்டிகளுக்கான விதிகளை கடுமையாக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. வாகனம் ஓட்டுவோர் போக்குவரத்து விதியை மீறி பிடிபட்டு அபராதம் மற்றும் தண்டனைக்கு உட்படுபவர்கள் நகல் ஓட்டுநர் உரிமத்தை மட்டுமே அளிப்பதால், வேறு நகலை வைத்து அவர்கள் தொடர்ந்து வாகனம் ஓட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த வாரத்தில் அறிவித்தார். அதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்தான் என்று கருத்துத் தெரிவித்தது. அதோடு, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்தான் இனி வாகனம் வாங்க முடியும் என்ற விதியும் அமலுக்கு வருகிறது. பழகுநர் உரிமம் வைத்திருந்தாலும் வாகனம் வாங்க அனுமதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விதிகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.