தமிழ்நாடு

ரூ.100-க்காக நண்பன் கொலை - போதையில் வெறிச்செயல்

webteam

100 ரூபாய் பணத்துக்காக நண்பனை கல்லால் அடித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட மோதல் ஒருவரின் உயிரைப் பறித்ததோடு, மற்றொருவரின் எதிர்காலத்தையும் சிதைத்துவிட்டது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரைச் சேர்ந்தவர், முருகேசன். இவர் திருஷ்டி கழிப்பதற்காக பயன்படுத்தப்படும் கருடன் கிழங்கு விற்பனை செய்து வந்தார். கிழங்கு எடுக்கச் சென்ற இடத்தில், தனசேகர் என்பவர் முருகேசனுக்கு அறிமுகமானார். பின்னர் சேர்ந்தே கருடன் கிழங்கு விற்பனை செய்து, பங்கு பிரித்துக் கொண்டனர். வியாபாரம் முடிந்தபின், ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது இருவரின் வழக்கம்.

அதேபோல் திங்கட்கிழமை ஒன்றாக மது அருந்திய இருவரும், கிழங்கு விற்ற பணத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது, ஏற்கனவே முருகேசன் தர வேண்டிய 100 ரூபாயை சேர்த்து கொடுக்குமாறு தனசேகர் கூறியுள்ளார். அதற்கு முருகேசன் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதுவரை நண்பர்களாக இருந்த இருவரும், மதுபோதையால் எதிரிகளைப் போல் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது தனசேகர், கற்களைக் கொண்டு முருகேசனை தாக்கத் தொடங்கினார். அதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் போதையில் இருந்த தனசேகரை கைது செய்தனர். சமீப காலமாக அற்ப காரணங்களுக்காக நடந்து வரும் கொலை சம்பவங்கள், சமூகத்தின் மனநிலையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.