கஞ்சா தகராறில் 15 ஆண்டு கால நண்பனை குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(40). இவரும் மாடம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ்(37) என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் நண்பர்களாக இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. நீண்ட நாள் நண்பர்கள் என்பதால் அவர்களுக்குள் சண்டை நடப்பதும் அது கைக்கலப்பில் போய் முடிவதும் இயல்பான ஒன்று என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வந்த நிலையில், ரவி மட்டும் விலகி காய்கறி மற்றும் பூ வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை இருவரும் கஞ்சா அடிக்கச் சென்றதாகவும் அப்போது இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து மருஅருந்தி விட்டு ஆட்டோவில் வந்த ரவி, முடிச்சூர் நேதாஜி நகர் 4வது தெருவில் நின்று கொண்டிருந்த ராஜேஷை அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகராறில் ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரவியின் இடது கால் தொடை, மற்றும் இரண்டு கைகளிலும் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனைக் கண்ட ஆட்டோ ஒட்டுனர் சண்டையைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை ராஜேஷ் வெட்டியதாகவும் அதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கத்திக்குத்து பட்ட ரவி உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகில் உள்ள தெருக்களில் ஓட முயன்றுள்ளார். இதனால் அவரது உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறி தெருவெல்லாம் சிதறி கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து ரவியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்கரணை போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜேஷை கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.