தமிழ்நாடு

ரெம்டெசிவிருக்கு காத்துக்கிடக்கும் மக்கள்: தண்ணீர் வழங்கி தாகம் தீர்க்கும் தன்னார்வலர்கள்

நிவேதா ஜெகராஜா

ரெம்டெசிவிர் மருந்து வாங்க பல மணி நேரம் கால் கடுக்க காத்திருக்கும் மக்களுக்கு கடந்த மூன்று நாட்களாக தன்னார்வ அமைப்பினர் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்கின்றனர்.

ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சைக்கு நேரடியாக பயன்படுத்தப்படாவிட்டாலும், வைரஸ் தொற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது, மருத்துவமனையில் இருக்கும் அவகாசத்தை குறைப்பது போன்ற காரணங்களால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளால் இந்த மருந்து சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

தங்களின் ரத்த உறவுகள், உயிர் நண்பர்களை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து விட்டு, ரெம்டெசிவிர் எப்போது கிடைக்கும் என்கிற பதற்றத்தில் மணி கணக்கில் வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஒரு இடத்தில் மட்டுமே விநியோகிக்க படுவதால் சென்னையில் இருந்து மட்டுமின்றி தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து மருந்து வாங்க வருகின்றனர்.

சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் கால் கடுக்க காத்திருந்தால் தான் மருந்து கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இப்படி மணிக்கணிக்கில் கோடை வெயிலில் காத்திருக்கும் மக்களுக்கு தண்ணீர் உட்பட அடிப்படை வசதி கூட சுகாதார துறை சார்பில் செய்து தரப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு கடந்த சில தினங்களாக எழுந்தது.

இந்நிலையில் புரசைவாக்கத்தை சேர்ந்த தவுஹித் ஜாமாத் அமைப்பை சேர்ந்த தன்னார்வளர்கள் கடந்த மூன்று நாட்களாக, நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்கின்றனர். வரிசையில் நிற்கும் மக்களுக்கு மட்டுமின்றி, காவல்துறையினர், தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கி வருகின்றனர்.

'மக்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என இஸ்லாம் மார்க்கம் கூறுகிறது' என்றும், இதை மனதில்கொண்டே தாங்கள் இந்த சேவையை செய்வதாக கூறுகிறார் தன்னார்வலர் சிந்தாமகர். மேலும், அடுத்த வாரத்தில் இருந்து உணவு வாங்க முடியாமல் காத்திருப்பவர்களுக்கும் உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறும் இவர்கள், ரமலான் மாதத்தில் மக்கள் சேவை செய்வதை பாக்கியமாக கருதுவதாக தெரிவிக்கின்றனர். இந்த சேவைக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். 

- ந.பால வெற்றிவேல்