தமிழ்நாடு

காஞ்சி: வீதியில் கிடந்த ஜெயலலிதா புகைப்படம் பதித்த விலையில்லா புத்தகப்பைகள் -நடந்தது என்ன?

Sinekadhara

கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட வைத்திருந்த ஆயிரக்கணக்கான பை மற்றும் செருப்புகள் காஞ்சிபுரத்தில் தேக்கமடைந்து வீணாக குப்பையில் வீசப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் அரசு சார்பில் வழங்க இருந்த மாணவர்களின் பொருட்களை குப்பையில் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா புத்தக பையில் இடம்பெற்றுள்ள முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் கூறியிருந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் போட்ட விலையில்லா இலவச புத்தகப்பை காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தெருவில் இருக்கும் சீனிவாசா பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது சில நூறு புத்தகப்பைகள் தீயில் எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை வழங்குவதில் பிரச்னை எழுந்தது. இதன் காரணமாக புத்தகப்பையை மாணவர்களுக்கு வழங்காமல் தேக்கி வைத்திருக்கிறார்கள். தற்பொழுது மாநகராட்சி சார்பாக பள்ளி கட்டடங்களைப் புதுப்பிப்பதற்காக இடிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான புத்தகப்பைகள் வீதியிலும் குப்பைகளிலும் தூக்கி வீசப்பட்டு இருப்பது பார்ப்பவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் பை. மற்றும் செருப்புகள் வீதியில் வீசப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில் பை மற்றும் செருப்புகளை குப்பையில் வீசியது யார்? அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அனுப்பி முறையாக ஆய்வுசெய்து உரிய விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.