ஹோட்டல்களிலோ, சாலையோர கடைகளிலோ விரும்பி வாங்கும் உணவு வகைகளில் பரோட்டாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஹோட்டல்களில், பரோட்டோவுக்கான வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் நிலையில், பரோட்டோ தயாரிக்க இலவச பயிற்சி அளிக்கும் இளைஞருக்கு வரவேற்பு கூடியுள்ளது.
வெண்ணிற பரோட்டாவில் பொன்னிற புள்ளிகளுடன் மென்மையாக காட்சியளிக்கும் பரோட்டாவை சால்னாவில் பிச்சுப்போட்டு சாப்பிட்டால், பரோட்டோ சூரி போல கோட்டை அழித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து சாப்பிடத் தொடங்குபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆனால், பல உணவகங்களில் பரோட்டா மாஸ்டர்களுக்குத்தான் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. இதையறிந்த மதுரை கூடல்நகரைச் சேர்ந்த முகமது ஷாசிம் என்ற இளைஞர், பரோட்டா பயிற்சி மையத்தை தொடங்கி நடத்திவருகிறார். மூன்று தலைமுறையாக உணவகத்தொழிலில் இருந்த அனுபவத்தில் இந்தப் பயிற்சி மையத்தை முகமது ஹாசிம் தொடங்கி நடத்திவருகிறார்.
20 முதல் 30 நாட்களுக்குள் பலவிதமான பரோட்டாக்களை தயார் செய்ய கற்றுதரும் இவர், தன்னிடம் பயின்றவர்கள் வெளிநாடுகளில் பரோட்டா மாஸ்டராக பட்டையை கிளப்புவதாக கூறுகிறார். தன்னிடம் பரோட்டா போட கற்றுக்கொள்ள வருபவர்களில் பலர் பட்டதாரிகள் என்றும் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
பரோட்டா மாஸ்டர்களுக்கு அதிக தேவை இருப்பதோடு நல்ல ஊதியமும் கிடைப்பதால், வேலையில்லா பட்டதாரிகள் பலர் பரோட்டோ மாஸ்டராக விரும்புகிறார்கள் என்பதற்கு இவரிடம் பயிற்சி பெற வருவோரின் எண்ணிக்கையே எடுத்துக்காட்டாக உள்ளது.