சென்னை மெட்ரோ முதலாம் கட்ட வழித்தடம் முழுவதும் இன்றும், நாளையும் (11.02.2019 வரை) இலவசமாக மக்கள் பயன்பாட்டுக்கு இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதன்மூலம் முதலாம் கட்ட வழித்தடத்தில் உள்ள 32 ரயில் நிலையங்களிலிருந்து இலவசமாக பயணம் செய்யலாம். முதலாம் கட்ட வழித்தடத்தில் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கி மலையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதலாம் கட்ட வழித்தடம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் வருகையை அதிகரிக்க சோதனை முயற்சியாக இலவசமாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் கடந்த ஆண்டு சின்னமலை, தேனாம்பேட்டை போன்ற வழித்தடங்களில் இலவசமாக இயக்கப்பட்ட போது இரண்டு லட்சம் மக்கள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வண்ணாரப்பேட்டை டிஎம்எஸ் இடையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.