தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம் web
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம்.. தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்!

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இத்திட்டத்திற்காக 65 கோடி ரூபாய் வரை ஒதுக்கிடப்பட்டுள்ளது..

Rishan Vengai

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டன.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, திட்டங்களை தொடங்கிவைத்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம்

மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 31 ஆயிரத்து 373 பேருக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். அதற்கான விநியோக வாகனங்கள் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக 64 கோடியே 73 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்!

தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவு திட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பேசியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், ”இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்!

சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டித் தரப்படும்!

தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் பிள்ளைகள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும் என்பதே என் கனவு. அரசு தன் கடமையைத் தொடர்ந்து செய்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும்.

மக்களும் Self Discipline கொண்டவர்களாக நடந்துகொண்டு பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமக்காக உழைக்கும் #SanitaryWorkers-க்கு அதுதான் நாம் செலுத்தும் மிகப்பெரும் நன்றிக்கடன்!” என பதிவிட்டுள்ளார்..