பேருந்து கட்டணம் மாற்றியமைத்த பின்பும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பஸ் பாஸ் சலுகை, பேருந்துக் கட்டண மாற்றியமைப்பிற்கு பின்பும் தொடர்ந்து வழங்கப்படும் என தெவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 100 சதவீத கட்டண சலுகையுடன் வழங்கப்படும் பஸ் பாஸ் சலுகையும், தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் வழங்கப்படும் பஸ் பாஸ் சலுகையும் தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதற்காக ஆகும் ரூ.540.99 கோடியினை தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எழும் சிரமத்தை கருத்தில் கொண்டு 498 விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள், சாதாரண மற்றும் விரைவு கட்டண பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.