முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கின் பெயரால் நூதன மோசடி அரங்கேறி வருவதாக திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை என்பது தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குக் ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு முன்பு இராணுவப் பணிப் பொறியாளராகப் பணியாற்ற இந்தியா வந்தவர். அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் ஒருபுறம் தென் மாவட்ட மக்கள் தண்ணீர்ப் பிரச்னையால் வாடுவதையும் மறுபுறம் பெரியாற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதையும் பார்த்து, ஆற்றின் குறுக்காக ஒரு அணையைக் கட்டலாம் என்று ஆங்கில அரசிடம் அனுமதி பெற்றார். பின் பாதி கட்டப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அணை உடைந்து ஆங்கில அரசு திட்டத்தை மூட்டை கட்டினாலும் இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையெல்லாம் விற்று அணையைக் கட்டி முடித்தார்.
இன்றளவும் அவர் பெயரைச் சொல்லி பொங்கல் வைக்கும் அளவுக்கு அன்பும் நன்றியும் பாராட்டுகிறார்கள் தென்மாவட்ட மக்கள். இந்நிலையில், கடந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் பென்னி குக்கின் கொள்ளு பேரன் பேத்திகள் என டயானா ஸிப், ஸானி மற்றும் உறவினர்கள் என்று சிலர் தேனிக்கு வந்தனர்.ஆனால், இவர்கள் யாரும் பென்னி குக்கின் நேரடி வாரிசுகள் அல்ல என்பதும் இவர்களில் ஒருவர் மட்டும் பென்னிகுக்கிற்கு தூரத்து சொந்தம் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
கம்பம் அருகே உத்தமப்பாளையம் பகுதியைச் நேர்ந்த சந்தன பீர் ஓலி என்பவர், லண்டனைச்சேர்ந்த டயானா ஸிப் உள்ளிட்ட 3 பேரும் பென்னிகுக்கின் கொள்ளு பேத்திகள் என்று கூறி அறிமுகப்படுத்தி அழைத்து வந்ததோடு, லண்டனில் உள்ள பென்னிகுக் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையை சீர்செய்யவும் அங்கு பென்னிகுக்கிற்கு நினைவுச்சிலை எழுப்பவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக கூறுகிறார்கள் கம்பம் பகுதி மக்கள். இந்நிலையில் பென்னிகுக்கின் பேத்திகள் என்று நம்பி தாங்கள் உதவி செய்ததாக கூறுகிறார்கள் அந்த நிகழ்ச்சிக்கு உதவி புரிந்தவர்கள்.
இதனைதொடர்ந்து கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி தேனி கம்பம் பகுதியில் பென்னி குக்கின் பெயரில் நிதி வசூல் செய்தநிலையில், கொடைக்கானலில் பென்னிகுக் ட்ரஸ்ட் என்ற பெயரில் இதே சந்தன பீர் ஒலி என்பவர் பென்னிகுக்கின் நிலத்தை அபகரிக்க, முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார். மேலும் 1980 வரை பென்னி குக் பெயரில் கொடைக்கானலில் இருந்த 21 ஏக்கருக்கும் அதிக நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிர்ச்சித்தகவலை கூறுகிறார். இச்சுழலில் கம்பம் பகுதி மக்களின் புகார்கள் குறித்து லண்டனில் வசிக்கும் சந்தன பீர் ஒலியிடம் கேட்டபோது இந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் மறுப்பு தெரிவித்தாலும், பென்னிகுக்கின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளார் கோவிந்தன்.