தமிழ்நாடு

கட்டாத வீட்டுக்கு வாழ்த்துக்கடிதம் -பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் மோசடி?

Sinekadhara

பெரம்பலூரில் கட்டாத வீட்டுக்கு பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், வீடு கட்டியதாக மத்திய அரசிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்த்துக் கடிதம் பெற்ற நபர் தன்பெயரில் மோசடி நடந்திருக்கக்கூடும் என புகார் கூறியுள்ளார்.

கட்டாத வீட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் வந்ததாக குடும்பத்துடன் சென்று புகார் அளித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் பெரம்பலூர் புதுகாலனியை சேர்ந்த நீல்ராஜ். பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இதுவரை 1500 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1000 வீடுகள் கட்டிமுடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. 500 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, நான்கு தவணைகளாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள புதுகாலனியைச் சேர்ந்த நீல்ராஜ் என்பவருக்கு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் புதியவீடு பெற்றமைக்கு வாழ்த்துகள் என்றும், கட்டிய வீட்டின் முன்பு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதம் பெற்ற நீல்ராஜ், ஓட்டு வீட்டில் வசிக்கும் தனக்கு இனி வீடு ஒதுக்குவார்கள் என்று எண்ணி இருந்துள்ளார். நாட்கள் வருடங்களாக உருண்டோட வீடுகுறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறாத நீல்ராஜ், குடும்பத்துடன் சென்று பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். கடித நகலை கொடுத்து தனக்கு வீடு கட்டித்தருமாறு கோரிக்கை வைத்த நீல்ராஜ், தன்பெயரில் மோசடி ஏதும் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குடிசை மாற்றுவாரிய உதவி செயற்பொறியாளர் நவநீத கண்ணணிடம் கேட்டபோது, நீல்ராஜ் மனு கிடைக்கப்பெற்றதும் ஆய்வு செய்தோம் என்றும், அதில் நீல்ராஜ் பெயரில் எந்த ஒரு மோசடியும் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் வீடுவேண்டும் என்றால் உரிய ஆவணங்களுடன் நீல்ராஜ் விண்ணப்பிக்கலாம் என்றும் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். ’ரசீது இருக்கு கிணத்தை காணோம்’ என வடிவேலு சினிமா காமெடிபோல் பெரம்பலூரில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.