மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலமாக மாஸ்க், கையுறை போன்ற மருத்துவ பொருட்கள், ஆபீஸ் கவர்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலங்கள், நீதின்றங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்பபடுகிறது. இந்த விற்பனையில் கடந்த 2016 - 2021 ஆம் ஆண்டில் போலி ரசீது தயாரித்து பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த புகார் தொடர்பாக தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து ஊழல் தடுப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2016 ஆம்ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தத்து.
அதனடிப்படையில் மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடைபெற்ற நாட்களில் சிறைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி ஊர்மிளா, மதுரை சிறையின் ஜெயிலராக பணியாற்றிய வசந்தகண்ணன், தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாக உள்ள தியாகராஜன் மற்றும் மூலப் பொருட்கள் வழங்குவதில் மோசடி செய்த மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ஜாபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னையை சேர்ந்த சீனிவாசன், சாந்தி, வெங்கடேஷ்வரி, நெல்லையை சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி உள்ளிட்ட 11 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே தற்போது புதுக்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளரான ஊர்மிளா, பாளையங்கோட்டை சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், வேலூர் சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள் பிறப்பித்துள்ளார்.