தமிழ்நாடு

200 சிம் கார்டுகள்... சில செல்போன்கள்... மிரட்டல்கள் ! பெண்ணை துரத்திய 'லோன் ஆப்' கும்பல்

PT

திருப்பூரில் கடன் செயலி மூலம் மோசடி செயலில் ஈடுபட்ட கும்பலை, தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடன் செயலி ஒன்றின் மூலம் 18,000 ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். அக்கடனை தவணைக்காலம் முடிவதற்குள்ளேயே திருப்பிச் செலுத்துமாறு கேட்டு மிரட்டியுள்ளது ஒரு கும்பல். மேலும், தாங்கள் கடனை உடனே திருப்பிச் செலுத்தவில்லை என்றால், ’எஸ்கார்ட் சர்வீஸ்’ இணையதளத்தில் உங்களை பாலியல் தொழிலாளி என சித்தரிப்போம் எனக் கூறியுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் போலீஸில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், தமிழகத்தில் 5 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளது. அவர்கள் நைஜீரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு மோசடி வேலையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 200 சிம் கார்டுகள், வெளிநாட்டு தொடர்பு எண் கொண்ட சிம் கார்டுகளை உள்ளூர் எண்ணில் மாற்றக்கூடிய சிம்கார்டு பாக்ஸ்கள், மோடங்கள், லேப்டாப்கள் என பல்வேறு சாதனங்களை போலீஸார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.