சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 824 கோடியே 15 லட்ச ரூபாய் அளவுக்கு கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் செய்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு 14 வங்கிகளை உள்ளடக்கிய பாரத ஸ்டேட் வங்கி கூட்டமைப்பு புகார் மனு அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ இணை இயக்குநருக்கு பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் 16 பக்க புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதிகபட்சமாக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் 175 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கனிஷ்க் நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் பாங்க், பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 14 வங்கிகளில் கடன் பெற்று அசல் மற்றும் வட்டியை கனிஷ்க் நிறுவனம் பாக்கி வைத்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. மொத்தமாக 824 கோடியே 15 லட்ச ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.