வத்தலக்குண்டு அருகே அரசு பேருந்து தனியார் மில் வேன் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து சாலைபுதூருக்கு மில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, திண்டுக்கல் சாலையில் உள்ள சேவுகம்பட்டி பிரிவு அருகே வேன் சென்ற கொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்தும் தனியார் நூற்பாலை வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் வேன் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த டிரைவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்டு வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனை மற்றும் தேனி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது