தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் சென்னை தி-நகர் பகுதியில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் விதமாக 400 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தியாகராய நகரில் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி-ன் செயல்பாட்டினை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். தி.நகர், உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பண்டிகை நாட்களில் குற்றசம்பவங்களை தடுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
மேலும் 5 உயர் கோபுரங்கள், 3 காவல்துறை உதவி மையங்கள் என பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சென்னையில் பல பகுதிகளில் அதாவது புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பூக்கடை போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகிறது.