தமிழ்நாடு

“அவனே என் உலகம்; இதுவே கடைசியாக இருக்கணும்”- மாஞ்சா அறுத்து பலியான சிறுவனின் தந்தை கண்ணீர்..!

webteam

மாஞ்சாவால் இனிமேலும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சிறுவனின் தந்தை கண்ணீர் மல்க கூறினார்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா மற்றும் ஒரே மகன் அபிநவ் ஷராப். கோபால்  தனது மகன் மற்றும் மனைவியுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது குழந்தை அபிநவ் உயிரிழந்தான். மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டம் விட்டதில் சென்னையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தை அபிநவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் அபிநவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைக் கண்ட குழந்தையின் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து கோபால் கூறும்போது,  “வெளியில கூப்பிட்டு போய் விளையாட்டுக் காட்டலாம்னு பைக்கில் முன்னால் உட்கார வைத்து கூப்பிட்டு சென்றேன். நான் கொஞ்சம் கூட நினைச்சுக்கூட பார்க்கல. எங்கிருந்தோ அறுந்து வந்த மாஞ்சா கயிறு என் மகன் உயிரை பறித்துவிட்டது. என் கண்முன்னாலயே இந்தச் சம்பவத்தை பார்க்க வேண்டிய கொடுமையை நினைச்சா, மனசு தாங்க மாட்டேங்குது. என் கண்முன்னேயே துடிச்ச என் பிள்ளையை காப்பாற்ற முடியாம துடிச்சேன். அப்படியே என் உயிரும் சேர்ந்து போயிடக் கூடாதானு நினைச்சேன். 

நாங்க தவம் இருந்து பெற்ற பிள்ளை அபிநவ். அவன் விளையாடுறதை மணிக்கணக்கா உட்கார்ந்து ரசிப்போம். அந்தளவுக்கு சுட்டியான பையன். அவன் தான் எங்க உலகம். அவன் இல்லாத நாளை இனிமேல் நினைத்துக்கூட பார்க்க முடியல. இதுவே கடைசி சம்பவமா இருக்கணும். இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. எந்த பெற்றோருக்கும் இது நடக்கக் கூடாது. அதற்கான முயற்சியை போலீஸ் எடுப்பாங்கனு நாங்க நம்புறோ” என்று கதறி அழுத்தார் அபிநவ் தந்தை கோபால்.