நரேஷ் குப்தா
நரேஷ் குப்தா RAJ BHAVAN, TAMIL NADU twitter page
தமிழ்நாடு

”ஓய்வுக்கு பிறகு காந்திய போதனைகளை பரப்பினார்” - முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவு!

Prakash J

நரேஷ் குப்தா மறைவு குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய சுட்டுரையில், “மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார்.

ஆர்.என்.ரவி

அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி” என அதில் பதிவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா, தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக நீண்டகாலம் பணியில் இருந்தவர். அவர், 05.01.2005 முதல் 31.07.2010 வரை தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்துள்ளார். அதற்கு முன்பு 1998 முதல் 2000 ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். 2006 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் அவருக்கு சவால் நிறைந்ததாக இருந்தபோதும், அதைச் சிறப்பாகச் செய்துகாட்டியவர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவற்றையும் திறம்பட மேற்கொண்டவர்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு காந்தி போதனைகளை பரப்பும் பணியினை செய்துவந்தார். தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகிப்பதற்கு முன்பு, 2001-2002இல் உள்துறைச் செயலராகவும், 2002-2005இல் மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் செயலராகவும் பணிபுரிந்துள்ளார். தன்னுடைய பணிக்காலத்தில் மிகவும் எளிமையான, நேர்மையான அதிகாரி எனப் பெயர் எடுத்த நரேஷ் குப்தா, கடந்த ஐந்தரை ஆண்டுகளில், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இறுதியாக, கடந்த 7ஆம் தேதி அவர் செய்தியாளர்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மறைவுக்கு, அனைத்துக் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.