ப தனபால் புதிய தலைமுறை
தமிழ்நாடு

அமைச்சரான மகன்.. அதிமுகவிலிருந்து விலகிய தனபால்.. அதிரடி முடிவு!

2016-2021-ஆம் ஆண்டு காலத்திலும் சபாநாயகராகப் பதவி வகித்தார்.

Prakash J

தவெகவில் இணைந்து அவரது மகன் அமைச்சரான நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் ப.தனபால் விலகியுள்ளார்.

அதிமுகவின் முகமாக அறியப்பட்டவர் ப.தனபால். 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2001-ஆம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு, 2011-ஆம் ஆண்டு தேர்தலில் ராசிபுரத்தில் இருந்தும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் அவினாசி தொகுதியில் இருந்தும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனபால், 2012-2016-ஆம் ஆண்டு காலத்திலும், 2016-2021-ஆம் ஆண்டு காலத்திலும் சபாநாயகராகப் பதவி வகித்தார். இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நடைபெற்ற தேர்தலில் அவருக்கு அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதற்கிடையே அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக அக்கட்சியே இரண்டு பிரிவாக உள்ளது. அதில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, தவெகவின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவ்வாட்சிக்கு ஆதரவு தெரிவித்தது.

இதனால், அவர்களுடைய கட்சிப் பொறுப்புகளை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இது, மேலும் அக்கட்சியில் பிளவை உண்டாக்கியுள்ளது. இதனால், அக்கட்சியில் பலரும் அதிருப்தயில் உள்ளனர். இன்னும் சிலர் அக்கட்சியைவிட்டு விலகி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் ப.தனபால் விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர், “அதிமுகவில் இருந்து நான் விலகி நீண்ட நாட்கள் ஆகிறது. என்னைப் போன்றவர்களை புறக்கணித்ததால் அதிமுகவை இன்று மக்கள் புறக்கணித்துள்ளனர். அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, அதிமுகவில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். தவெகவில் எனது மகன் அமைச்சராக இருப்பது மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார். முன்னதாக, தனபாலின் மகன் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெகவில் இணைந்து ராசிபுரம் தொகுதியில் வெற்றிபெற்றார். விஜயின் அமைச்சரவையில் அவருக்கு வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.