தமிழ்நாடு

வாஜ்பாய் மறைவு இந்தியாவின் பேரிழப்பு - முதலமைச்சர் பழனிசாமி

வாஜ்பாய் மறைவு இந்தியாவின் பேரிழப்பு - முதலமைச்சர் பழனிசாமி

webteam

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதென எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வாஜ்பாய் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இந்திய நேரப்படி, மாலை 5.05க்கு பிரிந்தது. இதனையொட்டி பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, வாஜ்பாய் இறப்பு செய்தியை கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். வாஜ்பாய் தன்னுடைய வாழ்வை இந்தியாவிற்காக அற்பணித்தவர் என்றும், இந்திய அரசின் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை பெற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு என்று கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், பாஜக கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.