உடலை தோண்டி எடுக்கும் பணியில் pt web
தமிழ்நாடு

முன்னாள் எம்பியின் உதவியாளராக இருந்தவர் கொலை.. உடல் தோண்டி எடுப்பு

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பியின் உதவியாளர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை தொண்டி எடுக்கும் பணி நடைபெற்றது.

PT WEB

தாம்பரத்தில் சொத்திற்காக முதியவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவர் முன்னாள் எம்பி. குப்புசாமியின் உதவியாளராக இருந்தவர் மற்றும் திமுக பிரமுகர்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் குமார்(71). இவர் திமுகவில் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார்.

ஓரிரு தினங்களுக்கு முன் குமார் காணாமல் போனதாக காவல்நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. இதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சொத்திற்காக குமார் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் ரவி, விஜய், செந்தில் என மூன்றுபேரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குமார் கொலை செய்யப்பட்டு செஞ்சி மேல் ஓலக்கூரில் உடல் புதைக்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், இன்று முன்னாள் எம்பியின் உதவியாளரின் உடலை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது. செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை முன்னிலையில் குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தடயவியல் மருத்துவர் கீதாஞ்சலி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கொலை செய்து புதைக்கப்பட்ட குமாரின் சடலத்தை உடற்கூராய்வு செய்ய உள்ளனர்.