தமிழ்நாடு

முன்னாள் எம்பி மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பம்-கொலை வழக்கில் 5 பேர் கைது-நடந்தது என்ன?

PT

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மஸ்தான் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டநிலையில், திடீர் திருப்பமாக அவரது உறவினர், கார் ஓட்டுநர் ஆகியோரே சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை கைதுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர், அ.தி.மு.க.வில் கடந்த 1995-முதல் 2001-வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். பின்னர், கட்சியில் இருந்து விலகிய அவர், தி.மு.க.வில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளராக இருந்து வந்தார். அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சென்னை சேப்பாக்கத்தில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். இவரது காரை அவரது உறவினரான இம்ரான் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே சென்றபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்து, பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மஸ்தானின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு உடல் நல்லடக்கமும் செய்யப்பட்டது. உயிரிழந்த மஸ்தான் சடலத்தை பார்த்தபோது முகத்தில் மற்றும் கையிலும் காயம் இருந்ததையடுத்து போலீசாருக்கு மஸ்தான் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அவரது உறவினர்களும் மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையிடம் கூறியுள்ளனர்.

அத்துடன் மஸ்தானின் மகன் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மஸ்தானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறிய கார் ஓட்டுநர் இம்ரானிடம் தொடர்ச்சியாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மஸ்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கார் ஓட்டுநர் இம்ரான் கூறிய நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை எடுத்து அவர் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து இம்ரானிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் மஸ்தானுக்கும், இம்ரானுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது முதலில் உறவினர்கள் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இம்ரான் செல்ஃபோனை ஆய்வு செய்தபோது கொலை செய்ய திட்டம் தீட்டி நான்கு பேர் கொண்ட கும்பலிடம் பேசியது தெரியவந்தது. இதில் திடீர் திருப்பமாக மஸ்தானின் சகோதரரின் மருமகன், கார் ஓட்டுநர் ஆகியோர் சேர்ந்து கொலை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொலை செய்த கும்பலை பிடித்து விசாரித்ததில், மஸ்தானை திட்டம் தீட்டி காரிலேயே வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மஸ்தானின் கையை இரண்டு பேர் இருக்க பிடித்துக் கொண்டும், முகத்தையும், வாயையும் பொத்தி மூச்சு திணற திணற கொலை செய்திருப்பதும் போலீசாரணை விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் நெஞ்சுவலி ஏற்பட்டது போல் நாடக மாடி மஸ்தான் உறவினர்களையும், காவல் துறையையும் கார் ஓட்டுநர் இம்ரான் திசை திருப்ப நாடகம் ஆடியதும் கொலை செய்த கும்பலிடம் விசாரணை நடத்தியதில் தெரிய வந்துள்ளது.