M.R Vijayabasker & C. Vijayabasker  PT
தமிழ்நாடு

”இது வெறும் ட்ரெய்லர்தான்..” தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர் பேச்சு!

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

PT WEB

2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவு காரணமாக எஸ்.பி. வேலுமணி, சிவி சண்முகம் அணிகள் உருவாகி, தவெகவுக்கு ஆதரவு விவகாரம் சர்ச்சையானது. இதுவரை 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் அதிமுகவின் பலம் 41 ஆக குறைந்தது.

செய்தியாளர் ; M.மீரா

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு பின் அதிமுகவில் நிலவிய உட்கட்சிப் பூசல் காரணமாக எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்கள் அடங்கிய ஓர் அணியும் கே.பழனிசாமி தலைமையிலான ஓர் அணியும் என 2ஆக பிரிந்தது. அதிமுகவின் கட்டுப்பாட்டையும் மீறி ஆளும் தவெகவுக்கு சட்டப்பேரவையில் ஆதரவளித்திருந்தது பேசுபொருளானது. மேலும் 6 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதுவரை தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். இதன்மூலம் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 41 ஆக குறைந்திருக்கிறது.

C.Vijayabaskar

அதிமுகவில் இருந்த பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்யபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இந்த வரிசையில்  அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கரும், அதேபோல் முன்னாள் அமைச்சரும் கருதி தொகுதி எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, இன்று அவர்கள் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர். தவெகவில் இணைந்தபிறகு பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஓர் அரசியல் புரட்சியைச் செய்திருக்கிறார் முதல்வர் விஜய். புரட்சித் தலைவர் இருந்தபோது அவர் 3 முறை முதலமைச்சராக இருந்தார். அவரைத் தொடர்ந்து இனி முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிதான் தமிழ்நாட்டில் தொடரும்” என்றார்.

M.R . Vijayabaskar

தொடர்ந்து பேசிய சி.விஜயபாஸ்கர், ”பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் ஒரு மலர்ச்சியை உருவாக்கும். மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள். தவெக வேறு; தமிழ்நாடு வேறு அல்ல என்ற மக்களின் குரலை மனதில் ஏந்தி வரவிருக்கும் எல்லாத் தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும். இந்த இணைப்பு விழா வெறும் ட்ரெய்லர்தான். முதலமைச்சரின் அனுமதி வாங்கி டெல்டாவில் மாபெரும் மற்றொரு இணைப்பு விழாவை நடத்திக் காட்டுவோம். மேலும், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி 7 மாவட்ட விவசாயிகளுக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு துணை நிற்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார் .