தமிழ்நாடு

“உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்” இந்தி மொழி பயிற்சியா..! - தங்கம் தென்னரசு கண்டனம்

webteam

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்கப்படுவதற்கு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.ஃபில்  மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இந்தி மொழி பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்றுத் துவக்கி வைத்து அதற்காக ஆறு லட்ச ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்.
 
அத்துடன், தமிழில் உயர்கல்வி பயிலும் இம்மாணவர்கள் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு உருவாகும் என்ற பழைய புளித்துப் போன கதையை மீண்டும் திருவாய் மலர்ந்தருளி புளகாங்கிதம் அடைந்திருக்கின்றார். 

‘தமிழ் அழிப்பு மற்றும் பண்பாட்டு சிதைவு” அமைச்சராக தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றார் பாண்டியராஜன். இந்த ஒரு வருடப் பயிற்சியும் சென்னையில் இயங்கி வரும் ‘இந்தி பிரச்சார சபா” மூலமாக நடத்தப்பட்டு, அவர்களாலேயே சான்றிதழும் வழங்கப் பெறும் என்ற தகவல் ஒட்டு மொத்த தமிழ் வளர்ச்சித் துறையையும் கேலிக்குரியதாக ஆக்குகிறது. 

மொழிப் பிரச்னையில் தமிழகம் ஒரு கந்தக பூமி என்பதை மறந்து தமிழக மக்களின் உணர்வுகளோடு மீண்டும் சீண்டி விளையாடத் துவங்கியிருக்கும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.