S.P வேலுமணி
S.P வேலுமணி முகநூல்
தமிழ்நாடு

“பாஜகவினர் கணக்கிலேயே இல்லை” - விளாசிய S.P வேலுமணி

webteam

பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனின் அறிமுக கூட்டம் கோவை குளத்துப்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி.வேலுமணி, "2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இம்முறை நாம் வெற்றிபெற வேண்டும். யார் நம்முடைய போட்டி? யார் நமக்கு எதிரி? இதை முதலில் யோசியுங்கள். திமுகதான் நம் போட்டி.

திமுகவில் ரியல் ஸ்டேட் செய்து தொழில் செய்து வருபவர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். தொழில் செய்பவர்கள், பணம் வைத்துள்ளவர்கள்தான் எம்.பி., ஆக வேண்டுமென்றால் டாட்டா, பிர்லா மட்டும்தான் ஆக முடியும், பொறுப்புக்கு வர முடியும். உங்கள் தொகுதியில் திமுக எம்.பியை கடந்த 5 ஆண்டுகளில் பார்த்தித்தீர்களா?

அதிமுகவில் கட்சியில் உழைத்தவர்கள்தான் பெரிய பொறுப்புக்கு வரலாம். கிளை செயலாளராக இருப்பவர்கள் பொதுச் செயலாளராக, முதல்வராக வரலாம். அதுதான் எடப்பாடி பழனிசாமி.

கோவை மாவட்டம் முழுவதும் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை நாங்கள் கொடுத்துள்ளோம். கொலுசு கொடுத்து ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றுவார்கள் எனச் சொல்கின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற இப்படி வருவார்கள். எதுவும் எடுபடாது. சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகளால் அரசு அதிகாரிகள் கூட திமுக ஆட்சி வேண்டாம் எனச் சொல்கின்றனர்.

திமுக, பாஜக வாட்ஸ் அப், செல்போனில் ஐ.டி.விங் வைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். அதிலும் பாஜக முதலில் 10 பூத்தில் ஆட்கள் போடுங்கள், அதன்பின் எங்களிடம் போட்டிக்கு வாருங்கள். பாஜக எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது. அவர்களைப் பற்றி கவலையும் இல்லை" எனக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.