தமிழ்நாடு

“எங்கள் மடியில் கனம் இல்லை” - ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஊழல் புகாருக்கு செல்லூர் ராஜூ பதில்

“எங்கள் மடியில் கனம் இல்லை” - ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஊழல் புகாருக்கு செல்லூர் ராஜூ பதில்

webteam

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக தமிழக நிதியமைச்சர் முன்வைத்திருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “தவறு செய்தால் தயவு தாட்சன்யமின்றி அரசு நடவடிக்கை எடுக்கலாம். எங்கள் மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை” என பதில் கூறியுள்ளார்.

தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாளையொட்டி கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பெரியார் திருவுருவ படத்திற்கு முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில், அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசுகையில், “தந்தை பெரியார் தமிழகத்தின் தன்மானத்தை மீட்டெடுத்தவர். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உணர்வுகளை ஒற்றுமை படுத்தியவர். பிறப்பால் ஆண் பெண் மட்டுமே என கூறி சாதி ஏற்றத்தாழ்வுகளை களைந்தவர். 95 வயது வரை உடல்நலக்குறைவை பொருட்படுத்தாமல் பட்டிதொட்டி எங்கும் மக்களுக்காக சமூக நீதிக்காக, பெண் விடுதலை, சுயமரியாதை குறித்து பேசியவர்” என பெரியாரின் சிறப்புகளை பேசினார்.

பின்னர் தமிழக நிதியமைச்சர் ஸ்மார் சிட்டி திட்டம் பற்றி கூறியிருந்த முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது மூன்று முன்னாள் அமைச்சர்களின் நலனுக்காக செய்யப்பட்டது என நிதியமைச்சர் பிடிஆர் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்துள்ளார். பொறுப்பான அமைச்சர் வாயில் இருந்து இப்படியான வார்த்தைகள் வருவது வரவேற்கத்தக்கது அல்ல. தற்போது ஆட்சி அதிகாரமும், நிதித்துறையும் அவரிடத்தில் உள்ளது என்பதால் அப்படி பேசுகிறார். மற்றபடி அதில் உண்மையில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் பயன்பாடு குறித்து மதுரை மக்களுக்கு தெரியும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 75 சதவீத பணிகள் மதுரை மத்திய தொகுதியான தற்போதைய நிதியமைச்சரின் தொகுதியில் தான் நடைபெறுகிறது. அதுவே முதலில் அவருக்கு தெரியவில்லை. சட்டம் உங்கள் கையில் உள்ளது அமைச்சரே... எவன் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள். பொத்தாம் பொதுவாக குறைகூற வேண்டாம். தவறு செய்தால் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுங்கள் என்றுதான் நாங்களும் கூறுகிறோம். ஆனால் அதற்காக நலத்திட்டங்களை கொச்சைப்படுத்தி பேசுவது நல்லதல்ல. அந்தவகையில், அதிமுகவின் திட்டங்களை மறைத்து, மேலும் அதை கொச்சைப்படுத்தி நீங்கள் பேசுவது தவறு” என்றார்.

மேலும், “நிதியமைச்சரின் பின்புலம் என்னவென்று எங்களுக்குத் தெரியும். ஆகவே எங்களை தவறாக பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து எங்களையும், அதிமுக திட்டங்களையும் குற்றம்சாட்டி பேசுவது அழகல்ல. தற்போதைய வணிகவரித்துறை அமைச்சரின் கிழக்கு தொகுதிக்கு 247 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செய்து கொடுத்துள்ளோம். எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்று பார்க்காமல் மதுரை மக்களை நினைத்து திட்டங்களை செய்தோம். பெரியார் பேருந்து நிலையம் தற்போதைக்கு கட்டப்படுவது தான். அதை நாங்கள் முன்னெடுக்கவில்லை.

மட்டுமன்றி ஸ்மார்ட் சிட்டி என் துறை அல்ல. மதுரையின் அமைச்சர் என்ற முறையில் அதனை ஆய்வு செய்தேன். ஆகவே தொடர்ந்து என்னிடம் ஸ்மார்ட்சிட்டி திட்டங்களை குறித்து நோண்டி நோண்டி கேட்க வேண்டாம். அந்தப்பணிகளை செய்தது யார் என்றுக்கூட எனக்கு தெரியாது. அதிகாரிகள் தவறு செய்திருந்தால், உலக வங்கி எப்படி நிதி தந்திருப்பார்கள்? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பார்க்காமல் உலக வங்கி நிதி ஒதுக்குவார்களா? வாய் புளித்தோ மாங்காய் புளித்ததோ என நிதி அமைச்சர் பேசக்கூடாது. மதுரையில் எந்த திட்டத்திலும் தவறு நடக்கவில்லை. இனி பிறக்கும் சந்ததி கூட எங்களை நினைக்கும் வகையில்தான் நாங்கள் திட்டங்கள் கொண்டு வந்தோம். அதுதான் மதுரைக்காரன்” என காட்டமாக பேசினார்.

கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக பேசுகையில், “முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு என்பது காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெறுகிறது. ஆட்சி மாற்றம் நடந்தால் இப்படித்தான் செய்வார்கள். எங்கள் மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை. மதுரையில் எப்போது தேர்தல் நடந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என பேசினார்.

- மணிகண்டபிரபு