சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பாஜக இடையே நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த இடபங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டியின் சாரம்சத்தை பார்ப்போம்.
கேள்வி: அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள இடங்களை பாஜக கேட்பதாக தகவல் வருகிறதே?
பதில்: வாய்ப்பு கேட்பது அவர்களின் கடமை. ஏற்றுக்கொள்ளுவது என்பது எங்களின் முடிவு. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், எங்களுக்கு என்று ஒரு முடிவு உள்ளதா இல்லையா. ஒத்துக்கொள்வது என்பது கட்சி நலனை பொறுத்து அமையும். இவை அனைத்தையும் பார்த்துவிட்டு எங்கள் கட்சி நலன் பாதிக்காத வகையில் முடிவு இருக்கும்.
கேள்வி: ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ் தாய் அவமதிக்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: பொதுவாக தாய், தந்தை என்பது தெய்வத்திற்கு சமம். அதேபோன்று தமிழ்த்தாய் வாழ்த்து என்பது ஒவ்வொருவரும் மரியாதை செலுத்தவேண்டிய நிகழ்வு. இது உணர்விலேயே இருக்கவேண்டும்.மரியாதை செய்யாத விஷயத்தை ரிசர்வ் வங்கி செய்தது என்பதை உண்மையிலே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது. தமிழ்த்தாயை அவமதிப்பது என்பது ஒரு தாயை அவமதிப்பது போன்றதுதான்.இதுதான் அதிமுகவின் நிலை.
கேள்வி: முரசொலியில் தமிழக ஆளுநர் குறித்து எழுதப்பட்டுள்ளதே...?
பதில்: திமுகவை பொறுத்தவரையில் ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. ஆட்சியில் இல்லாதபோது ஒன்று. மாறி மாறி பேசும் இரட்டைநாக்கு. பச்சோந்திகள் எந்த இடத்திற்குச் செல்கிறதே இந்த இடத்திற்கு ஏற்றாற்போல் நிறத்தை மாற்றிக்கொள்ளும். அதுபோல ஆட்டுக்கு தாடி தேவையில்லை. நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்று சொன்னார்கள். பின்னர் கவர்னரை சார்ந்துள்ளார்கள். இவர்களுக்கு ஏற்றவாறு ஒத்துவரவில்லை என்றால் கவர்னரை விமர்சனம் செய்வார்கள்.
இவர்களுக்கு ஒத்துஊதினால் கவர்னருக்கு புகழ்பாடுவார்கள். இவர்களுக்கு ஏற்றவாறு ஒத்து ஊதவில்லை என்றால் அவரை விமர்ச்சனம் செய்வார்கள். எங்கள் கட்சியினரே முரசொலியைப் படிப்பதில்லை என கருணாநிதியே கூறியுள்ளார்.