தமிழ்நாடு

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிப்பது உறுதி - ஜெயக்குமார்

Sinekadhara

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும் என்றும், 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று உறுதியாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், மாநில, மாவட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள் 120 பேர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டனர். தொடர்ந்து உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அடையாள அட்டையை வழங்கி, அவர்களுடன் குழு படமும் எடுத்துக்கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு தொழிலாளர்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்கவில்லை என்றும், விளம்பர அரசியலை திமுக அரசு செய்து, தொழிலாளர்களை வஞ்சிக்கின்ற அரசாக இருக்கிறது எனவும் கூறினார். மேலும் கொலை, கஞ்சா, போதை, கூட்டு பாலியலில் ஆகியவற்றில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாழமுடியாத சூழல் உள்ளது‌ என்றும், திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டு போய்விட்டது என்றும் கூறிய ஜெயக்குமார், குற்றங்களை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பொய் வழக்கு போட்டு அதிமுகவினரை கைதுசெய்யும் வேலையைத்தான் திமுக செய்துவருகிறது என்று சாடியும், அரசியல் தலையீடு இருப்பதால் காவல்துறை முறையாக விசாரணை நடத்த முடியவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை கண்டித்து, அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவது தொடர்பாக தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

அதேபோல் மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்றும், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று உறுதியாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று பேசினார்.