தமிழ்நாடு

"EPS மற்றும் OPS சந்தித்து பேசும் நிகழ்வு நடக்கலாம்" - முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்

webteam

எடப்பாடி பழனிச்சாமியுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசும் நிகழ்வு எங்கேயும் எந்நேரத்திலும் நடக்கலாம். ஓ பன்னீர்செல்வத்தை பாராட்டிய செங்கோட்டையனுக்கு நன்றி என முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் தெரிவித்தார்.


விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பசுமைவழிச் சாலை இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் விலகிய செந்தில் முருகன் உடன் இருந்தனர்.

விமான நிலையம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்..ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்பரைக்கு செல்வீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பிற்கு செல்வதற்கு முன்பு முறையாக அறிவித்த பின்னரே செல்வேன் என்றார்.

பின்னர் ஓ பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் பேட்டி அளித்த போது..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து நிற்கிறோம். இரட்டை இலை சின்னத்திற்காக பிரச்சாரம் செய்வோம் என்றார். மேலும் இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு போனதால் எந்த பின்னடைவும் இல்லை.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக மட்டுமே உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும், இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்காக பரப்புரை செய்வோம் என்றார்.

மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டைன் ஓ பன்னீர்செல்வத்தை பாராட்டியது தொடர்பாக பேசிய கு.ப கிருஷ்ணன், செங்கோட்டையன் மாப்பிள்ளைக்கு ரொம்ப நன்றி அவருக்கு திறந்த மனசு இருக்கிறது என தெரிவித்தார்.எடப்பாடி பழனிச்சாமியை ஒ.பி.எஸ் சந்திப்பாரா என்ற கேள்விக்கு எதுவும் நடக்கலாம் என பதிலளித்த குப கிருஷ்ணன் நாங்கள் எப்போதும் தோல்வியை கண்டு துவண்டு போவதும் இல்லை மகிழ்ச்சியை கண்டு பூரித்துப் போறவர்களும் இல்லை என கூறினார்.