தமிழ்நாடு

`உமாசங்கர் ஐ.ஏ.எஸ்-க்கு உரிய பதவி வழங்குக’ - சகாயம் கோரிக்கை

PT WEB

நேர்மையும் திறமையும் மிகுந்த உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அதிகாரமற்ற பதவியில் இருப்பதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். 9 ஆண்டுகளாக அதிகாரமற்ற பதவியில் இருக்கும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்-ஐ, அவரது தகுதிக்கு உரிய பதவிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையராக உமாசங்கர் ஐ.ஏ.எஸ் 9 ஆண்டுகளாக பதவி வகிப்பதை சுட்டிக்காட்டியுள்ள சகாயம் ஐ.ஏ.எஸ், அதிகாரியான உமாசங்கர் மாவட்ட வருவாய் அலுவலர் அளவிலான பதவியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நேர்மையும் திறமையும் மிகுந்த உமாசங்கரை கடந்த 9 ஆண்டுகளாக அதிகாரமற்ற பதவியில் வைத்திருப்பது , நேர்மையில் தீவிரம் காட்டும் அலுவலர்களை மட்டுப்படுத்தும் அரசியலாளரின் உத்தி என குறிப்பிட்டுள்ளார்.

1995 - 1996 காலக்கட்டத்தில் தமிழகத்தில் சுடுகாட்டு கூரை அமைக்கும் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகளை துணிச்சலாக வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் உமாசங்கர் என நினைவுபடுத்தியுள்ள சகாயம், அவரை இப்பணியில் இருந்து விடுவித்து ஐ.ஏ.எஸ் அலுவலருக்கான அதிகாரத்துடன் கூடிய பதவியை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு அலுவலர் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிறார் என்பதற்காக , அவரை தண்டிக்கும் வகையில் பணியிடங்கள் வழங்கும் போக்கை தமிழக அரசு தவிர்த்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தமிழக அளவில் குடிமை பணி வாரியம் அமைத்து , பணி மாறுதல்களை நெறிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.