மு.க.முத்து எக்ஸ் தளம்
தமிழ்நாடு

மு.க.முத்து மறைவு | முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. மதுரையிலிருந்து சென்னைக்கு விரைந்த கனிமொழி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.

Prakash J

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வரும் மு.க.முத்துவின் சகோதரருமான மு.க.ஸ்டாலினும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது உடல், பொதுமக்களின் பார்வைக்காக முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்பின்னர், அன்னாரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

அதைத் தொடர்ந்து சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்கிடையே மதுரையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற எம்பி கனிமொழி, சகோதரர் மு.க.முத்து காலமான செய்தி தெரிந்தவுடன் மாணவர்களுடன் மௌன அஞ்சலி செலுத்திய உடன் அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்துகொண்டிருக்கிறார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது. தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன் முத்து அவர்கள். நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.

பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு இரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து அவர்கள். பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க' என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும். என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து அவர்கள். என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ”முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயரமுற்றேன். தந்தையைப் போலத் திரைத் துறையில்தடம் பதித்தவர். அவரை பிரிந்து வாடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட உறவினர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.