மறைந்த திமுக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த கோ. சண்முகநாதன்(80) காலமானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் சுமார் 50 ஆண்டுகளாக தனி உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதனுக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சண்முகநாதன் உயிர் பிரிந்தது.
தமிழ் சுருக்கெழுத்து நிருபராக தமிழக காவல்துறையில் பணியாற்றிவந்தார் சண்முகநாதன். முதன்முறையாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற 1967இல் அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவரிடம் சண்முகநாதன் தனி உதவியாளராக பணிக்குச் சேர்ந்தார். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் அவரது கருத்துகளை எழுத்துமூலம் வெளியிட்டவர் சண்முகநாதன். அரசியல் வட்டாரங்களில் கருணாநிதியின் நிழல் என்று அழைக்கப்பட்டார் இவர். கருணாநிதியால் எழுதமுடியாத சூழல் ஏற்பட்ட போதிலும் அவருடைய எழுத்துக்களை சண்முகநாதன் பதிவு செய்துள்ளார்.
கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவராகவே கோ. சண்முகநாதனை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்த்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோ. சண்முகநாதன் தற்போது காலமானார்.