செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்து முருகனை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், மார்கழி மாதம் பிறந்து இரு தினங்களே ஆன நிலையில், அதிகாலை கோயில் நடைதிறக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அப்போது திருக்கோயிலுக்குள் சென்ற அவர், அபிஷேகத்தில் கலந்து கொண்டு முருகனை மனதார வழிபட்டார். தொடர்ந்து அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இதையடுத்து மூலவர், சண்முகர், பெருமாள், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று வழிபாடு செய்தார்.