மசினகுடியில் மிரண்டு ஓடிய ரிவால்டோ யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மசினக்குடி, நீலகிரி மலைப்பகுதிகளில் அசையும் குன்று போல் பிரம்மாண்டமாய் செல்லும் யானையின் பலமே அதன் தும்பிக்கைதான். அதில் ஏற்பட்ட காயம்தான் தற்போது ரிவால்டோவுக்கு பிரச்னையாக மாறியுள்ளது. ரிவால்டோ என்ற பெயர் நீலகிரி மாவட்டம் மசினக்குடி சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயம். காரணம் 10 ஆண்டுகளுக்கு முன் வெடிவிபத்தில் சிக்கியதில் இந்த யானையின் தும்பிக்கை பாதிக்கப்பட்டது. உணவு உண்ண முடியாமல் சிரமப்பட்ட ரிவால்டோவுக்கு மக்கள் பழங்களையும், உணவுகளையும் கொடுக்க, வனத்துறை தன் பங்குக்கு மருந்துகள் கொடுத்து குணமாக்கியது. காயம் சரியாக சரியாக, தும்பிக்கையில் இருந்த சுவாசிப்பதற்கான துவாரம் சுருங்கியது. அதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
ரிவால்டோ குடியிருப்புகளையே சுற்றி வருவதால் சமீபத்தில் தீ வைத்து கொல்லப்பட்ட 'எஸ்.ஐ.' யானையை போல் ரிவால்டோவுக்கும் மக்களால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என வனத்துறை அஞ்சுகிறது. எனவே தெப்பக்காட்டிலுள்ள முகாமிற்கு அழைத்துச்சென்று ரிவால்டோவை வளர்க்க திட்டமிட்டது. சுவாச பிரச்னை இருப்பதால், மயக்க ஊசி செலுத்தி வாகனத்தில் அழைத்து செல்ல முடியாததால் ரிவால்டோவுக்கு நன்கு அறிமுகமான பட்டன், கணேசன் ஆகியோர் உதவியுடன் யானையை முகாமிற்கு நடத்தி அழைத்துச் சென்றனர்.
15 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 10 கிலோ மீட்டரை கடந்த நிலையில் மற்றொரு காட்டுயானையின் வாசனையை நுகர்ந்த ரிவால்டோ , அங்கிருந்து மிரண்டு ஓடியது. அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், அதற்கு பழக்கப்பட்ட பகுதியைவிட்டு வெளியே வர மிரளுவதால், வாழைத்தோட்டம் கிராமத்திலேயே கூண்டு அமைத்து பழக்கப்படுத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது ரிவால்டோவுக்கு மதம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் அதனை எச்சரிக்கையாக கையாண்டு பழக்கப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.