தமிழ்நாடு

பெரும் போராட்டத்திற்கு பிறகு லாரியில் ஏறிய சின்னத்தம்பி யானை

webteam

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. விநாயகன், சின்னதம்பி என்ற  2 காட்டுயானைகளையும் பிடித்து அதனை இடமாற்றம் செய்ய 4 கும்கிகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் கும்கி யானைகளுக்கு காட்டு யானைகள் அடங்கவில்லை. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தி யானைகளை பிடிக்க வனத்துறை திட்டமிட்டது. அதன்படி விநாயகன் யானை பிடிபட்டது. ஆனால் சின்னதம்பி தப்பியது. 

சின்னத்தம்பியை உடனடியாக பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மீண்டும் கும்கி யானைகள் உதவியுடனும், மயக்க மருந்து செலுத்தி பிடிக்கும் திட்டத்துடனும் வனத்துறை களம் இறங்கினர்.அதன்படி கும்கி யானைகள் உதவியுடன் சின்னத்தம்பி பிடிபட்டது. பிடிபட்ட யானை சின்னதம்பியை டாப்சிலிப் வனத்துக்குள் கொண்டு விட வனத்துறை முடிவு செய்தது. ஆனால் சின்னதம்பியை லாரியில் ஏற்றுவது பெரும் போராட்டமாகவே இருந்தது. 

கும்கி யானைகள், ஜேசிபி உதவியுடன் சின்னத்தம்பியை லாரியில் ஏற்ற முயற்சி எடுத்தனர் வனத்துறையினர். ஆனால் சின்னத்தம்பி முரண்டு பிடிக்கவே பெரும் போராட்டம் நடைபெற்றது. கும்கி யானைகள் பெரும் அழுத்தம் கொடுத்து சின்னத்தம்பியை தள்ளியதால் எதிர்பாராத விதமாக சின்னத்தம்பியின் இரண்டு தந்தங்களும் பாதியாக முறிந்தன. கும்கி யானை தன் தந்தத்தால் தள்ளும்போதும் சின்னதம்பிக்கு காயம் ஏற்பட்டது. இப்படியாக பெரும் போராட்டத்துக்கு பிறகு சின்னதம்பி லாரியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.