தமிழ்நாடு

தெப்பக்காடு பழங்குடியின கிராமத்தில் நடமாடும் புலி -தானியங்கி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு

webteam
தெப்பகாடு பகுதியில் உள்ள பழங்குடியின கிராமத்தில் நடமாடும் புலியை 48 தானியங்கி கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ளது தெப்பக்காடு கிராமம். இங்கு பழங்குடியின மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி இங்குள்ள யானைப்பாடி பகுதியைச் சேர்ந்த மாரி என்ற பெண்ணை புலி கொன்று தின்றது. அப்போது முதல் வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை பொருத்தியும், ரோந்து சென்றும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். குறிப்பிட்ட அந்த பகுதியில் நான்கு புலிகள் நடமாடி வருவதால், பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான புலியை கண்டறிவதில் வனத்துறையினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊர் மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெண் கொல்லப்பட்ட அதே பகுதியில் தொடர்ந்து இரண்டு தினங்களாக புலி நடமாடியதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். பெண்ணை கொன்ற அதே புலி தான் அப்பகுதியில் நடமாடி வருவதாக ஊர்மக்கள் கூறுகின்றனர். பழங்குடியின மக்கள் பயன்படுத்தக்கூடிய ஆற்று பகுதியிலும், குடியிருப்புகளை ஒட்டியும் புலி நடமாடி இருக்கிறது. எனவே அந்த புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனத்துறையினர் ஏற்கனவே பழங்குடியினர் கிராமத்தைச் சுற்றிய பகுதிகளிலும், வனப்பகுதியிலும் 41 தானியங்கி கேமராக்களை பொருத்தி இருந்தனர். இந்த நிலையில் இன்று கூடுதலாக மேலும் 7 கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். இதன்மூலம் புலியை கண்காணிப்பதற்கு மொத்தம் 48 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.
புலி நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என வனத்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்கள் விறகு எடுக்கவோ அல்லது பிற தேவைகளுக்காகவோ வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. கிராமப் பகுதியில் சுற்றித்திரியும் புலி, பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான புலி தானா என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறை தெரிவித்திருக்கிறது.