தமிழ்நாடு

மீனாட்சியம்மன் ஆலயத்தில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் ஆய்வு

மீனாட்சியம்மன் ஆலயத்தில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் ஆய்வு

webteam

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்றிரவு தீ பிடித்து எரிந்த பகுதியில் தடய அறிவியல் நிபுணர்கள், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் காலை முதல் கோயிலில் வழக்கம்போல் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் 5 வாசல்களை கொண்டது. இதில் கிழக்கு சித்திரை வீதி பகுதியில் மட்டும் 2 வாசல்கள் உள்ளன.  ராஜகோபுரம் வழியாக மீனாட்சி அம்மன் சன்னதிக்கு செல்லும் பாதையில் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இதில் வலதுபுறம் ஆயிரங்கால் மண்டபத்தையொட்டியுள்ள கடைகளில் தீ பற்றியுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த படையினர், 20 தண்ணீர் லாரிகளின் உதவியுடன் கடுமையாக முயற்சித்து தீயை கட்டுப்படுத்தினர்.

இருப்பினும் 50க்கும் மேற்பட்ட கடைகளில் சுமார் 35 கடைகள் முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளன. நள்ளிரவில் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் கோயிலின் மேற்கூரை சிறிது சேதமடைந்துள்ளது. மேற்கூரை பூச்சுகள், சிறிய அளவிலான கற்கள் பெயர்ந்துவிழுந்து வருவதால் கிழக்கு வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தீ பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மேற்கூரையிலிருந்து கற்கள் பெயர்ந்து விழுவதால், அதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்வதற்காக வருவாய் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கோயிலிலுள்ள 5 வாயில்களில் தீவிபத்து நடந்த வாயில் வழியாக பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட ‌காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார்.