birds PT web
தமிழ்நாடு

கோடியக்கரை சரணாலயம்.. வெளிநாட்டுப் பறவைகள் வருகை அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!

வேதாரண்யம் அருகே ராம்சார்சைட்அங்கிகாரம் பெற்ற கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் சீசன் தொடங்கி உள்ளதால், பறவை ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

PT WEB

வேதாரண்யம் அருகே ராம்சார்சைட்அங்கிகாரம் பெற்ற கோடியக்கரைபறவைகள் சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் சீசன் தொடங்கி உள்ளதால், பறவை ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ராம்சார் சைட் அங்கீகாரம் பெற்ற கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான சீசன் காலங்களில் ரஷ்யா, சைபீரியா ஆர்ட்டிக் கிழக்கு ஐரோப்பா, மேற்காசிய நாடுகள், ஈரான் ஈராக் போன்ற 17க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து நான்காயிரம் முதல் எட்டாயிரம் மைல்கள் வரை பறந்து வந்து இங்கு பறவைகள் இளைப்பாரி செல்கின்றன. பறவைகள் வந்து செல்வதற்குரிய ஏற்ற சூழ்நிலை நிலவுவதால் கோடியக்கரை சரணாலயத்திற்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிகின்றன.

பறவைகள்

இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன்கூட்டியே செப்டம்பர் மாதத்திலேயே ரஷ்யா, சைபீரியா ஆர்ட்டிக் போன்ற குளிர்பிரதேசங்கலில் இருந்து 18 வகையான உள்ளான் இனத்தைச் சேர்ந்த கொசு உள்ளான், மண்டை உள்ளான், மூக்கு உள்ளான் போன்ற பறவைகள் சதுப்பு நில நீர்பரப்பில் பல்லாயிரக்கணக்கில் காணப்படுகின்றன.

நான்கு அடி உயரமுள்ள ’பூனாரை’ என்றழைக்கப்படும் பிளமிங்கோ பறவைகள், ஆயிரத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வந்துள்ளன. பிளமிங்கோ அணிவகுத்துச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இங்குள்ள பம்ப் ஹவுஸ் போன்ற சதுப்புநிலப் பகுதியில கூழைக்கிடா, நாரை, செங்கால் நாரை, கரண்டிவாயன், கொக்குகள் போன்ற உள்நாட்டுப் பறவைகள் முகாமிட்டுள்ளன. இந்தப் பறவைகள் கூட்டம்கூட்டமாகச் சதுப்பு நிலப்பகுதியில் காணப்படுவது கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. இந்த பறவைகள் தற்போது சரணாலயத்திலிருந்து வெகுதொலைவில் காணப்படுவதால் ஐந்து கி.மி. தூரம் வரை நடந்துசென்றுதான் பறவைகளை காணும் நிலை உள்ளது.

பறவைகள்

பறவைகளைக் காண்பதற்கு வசதியாக தொலைநோக்குக் கருவியுடன் பம்ப் ஹவுஸ், முனியப்பன் ஏரி ஆகிய இடங்களில் வனத்துறையினர் பார்வை கோபுரம் அமைத்துள்ளனர். கோடியக்கரை பறவைகள் சீசன் முன்கூட்டியே செப்டம்பர் மாதத்தில் தொடங்கி உள்ள நிலையில், இந்த ஆண்டு நல்ல மழைக்கான வாய்ப்பு உள்ளதால் மழைக்குப் பிறகு அதிக அளவில் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி பறவைகள் ஆய்வு மையம் உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.