தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றிபெற்ற சூழலில் தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைந்தது. இந்தச் சூழலில் தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தவெக கூட்டணியில் இணைந்த நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறியதாகவும் அறிவித்தது. அதேபோல வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்றும் காங்கிரஸ் அறிவித்தது.
தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதன் பின்னர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
அதோடு தவெக கூட்டணியில் சேர்ந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி இடம்பெறவுள்ளது.
கடைசியாக பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. தொடர்ந்து 1967-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசை அண்ணா தலைமையிலான திமுக அரசு வீழ்த்தியது. அதன் பின்னர் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திராத காங்கிரஸ் கட்சி தற்போது மீண்டும் அதிகாரத்தில் அமரவுள்ளது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.